Tamilசெய்திகள்

அதிமுக, பா.ஜ.க இடையே விரிசல் இல்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் விரிசல் இல்லை. கூட்டணி நன்றாக உள்ளது. ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பேசுவதுண்டு. பா.ஜ.க.வை பற்றி முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய கருத்து அவரது சொந்த கருத்தாகும் என்று கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து விட்டார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டில் நில அபகரிப்பு, கஞ்சா விற்பனை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அதை மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்கிறார்கள்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளனர். மேலும் ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக போலீஸ் டி.ஜி.பி. கூட எச்சரிக்கிறார். இருப்பினும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

நாங்கள் பலமுறை கூறியும், தி.மு.க.வினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.