தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என பதிவிட்டுள்ளார்.