அதிமுக தேர்தல் அறிக்கை தயார்! – விரைவில் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து முடிக்கப்பட்டு விட்டது.
அ.தி.மு.க.வில் தேர்தல் கூட்டணி இன்றுடன் பேசி முடிவு செய்ய உள்ளனர். இந்த கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? சேராதா? என்பது இன்று தெரிந்து விடும்.
இந்த நிலையில் இன்னும் 4 நாட்களில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக எந்தெந்த தொகுதியில் யார்-யார் போட்டியிட உள்ளனர் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைந்து வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நல்ல நாள் பார்த்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட அ.தி.மு.க. தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையே அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த 1 மாதமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள்-மாணவர்களுக்கு சலுகைகள், நெசவாளர்களுக்கு மானியம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான புதிய அறிவிப்புகள், பெண்களுக்கு புதிய கடன் உதவி திட்டம் என்று பல்வேறு அம்சங்களுடன் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.
ஆங்கிலம்-தமிழ் இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் நாளை மாலை சமர்ப்பிக்கிறார்.
தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.