அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும். பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools