அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வானகரத்தில் அதிமுகவினர் குவிந்துவருகின்றனர். இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது. ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
எனவே பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் காரில் வந்தார். இதனால் கட்சி தலைமை அலவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் குவிந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் வந்த வாகனம் மீது கற்கள்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்தரப்பினரும் கற்களை வீசி தாக்கினர். இதனால் அந்த இடம் போர்க்களம்போல் காட்சி அளித்தது. கட்சி அலுவலகம் உள்ள பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.