பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க ஆயத்தமாகி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் ஐ.டி.விங் என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முன் கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப அணிகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவுகளை சேர்ந்தவர்கள் தங்களது கட்சி சார்ந்த செய்திகள் மற்றும் அரசின் சாதனைகளை பரப்பி வருவதுடன் ‘மீம்ஸ்’களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. “மக்களவை தேர்தல் 2024-ன் போகஸ்” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் உள்பட ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் சமூக வலைதளங்களில் போடும் ‘மீம்ஸ்’ மற்றும் பதிவுகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக செயல்படுவது என்று அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் எங்களின் செயல்பாடு கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். அதற்கேற்ற வகையில் நாங்கள் பம்பரமாக பணியாற்ற உள்ளோம். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை எங்களுக்கு மேலும் ஊக்கம் அளித்து உள்ளது என்று தெரிவித்தார்.