X

அதிமுக சார்பில் 1000 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம்

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி, பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 3 முனை போட்டி ஏற்படக்கூடிய நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதற்கு முன்னே விருப்ப மனுக்களை வினியோகம் செய்து வருகின்றன.

தி.மு.க. முதலில் விருப்ப மனுக்களை கடந்த 19-ந் தேதி வினியோகிக்க தொடங்கியது. அ.தி.மு.க. 21-ந் தேதி முதல் வழங்கி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக விருப்ப படிவங்களை வழங்கியுள்ளது.

நாளை 1-ந் தேதி இதற்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது. அதனால் இன்றும் நாளையும் அதிகமான மனுக்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனுக்கள் ஆர்வத்துடன் பெற்று செல்கின்றனர்.

இதுவரையில் 1000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வினியோகிக்கப்பட்டதாக அ.தி.மு.க.வில் தெரிவிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். விண்ணப்ப கட்டணம் பொதுத் தொகுதிகளுக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிகளுக்கு ரூ.2000 வீதம் வசூலிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இடம் பெறுவதற்கான சாதகமான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அவை போக மீதமுள்ள தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என தெரிந்தும் நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளுக்கும் மனுக்களை பெற்று சென்றனர்.

விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்கள் நாளை (1-ந்தேதி) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இன்று தலைமை கழகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.