Tamilசெய்திகள்

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை – நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அந்த கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதை எதிர்த்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன.

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்துள்ளது.

இதன் பிறகும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருகிறார். எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரும் விளம்பரத்துக்காக மாறி மாறி வழக்கு போட்டு வருவதாக கூறி கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்த அவர் அதுவரை ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி-சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தார்.

ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.