Tamilசெய்திகள்

அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. அமைத்திருக்கும் மெகா கூட்டணியும், அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு தேர்தல் அறிக்கையாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளும், அ.தி.மு.க. கூட்டணி களமிறக்கியிருக்கும் தலைசிறந்த தகுதிபடைத்த வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் கூட்டணியே பிரமாண்ட வெற்றி பெறும் என்பதனை இப்போதே முன்கூட்டி சொல்லும் விதமாக மக்களிடம் எழுந்திருக்கும் ஏகோபித்த ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

குறிப்பாக கோதாவரி ஆற்றுநீரின் உபரி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை கிருஷ்ணா-காவிரி இணைப்பு மூலமாக தடுத்து, தமிழகத்தை பசுமை கொஞ்சும் பகுதியாக மாற்றிட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 7 பேர் விடுதலை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 வாழ்வாதார உதவி போன்ற நமது தேர்தல் வாக்குறுதிகள் ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் உற்று நோக்கப்பட்டு, அவர்களின் உளமார்ந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

வரலாறு காணாத வகையில் வாகை கனி கொய்து வங்கத்து கடலோரம் துயில் கொண்டிருக்கும் நம் தங்கத்தாரகையாம் ஜெயலலிதா, அவரது வலப்புறத்தில் சந்தனப்பேழையில் சாய்ந்துறங்கும் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கங்களின் வெற்றித் தேரோட்டத்துக்கு வித்திட்ட அண்ணா ஆகியோரது புகழடி பொற்பாதங்களில் 40 தொகுதிகளின் வெற்றியை சமர்ப்பிப்போம் என்கிற குருதி கலந்த உறுதியை நம் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களும் உளமார எடுத்திடவேண்டும்.

40 பாராளுமன்ற தொகுதிகளின் வெற்றியையும், 18 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றியையும் ஒருசேர ஈட்டுவதன் மூலம் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆளும் என்கிற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும். இதற்காக இப்பொழுதே மடைதிறந்த வெள்ளமென அ.தி.மு.க. சிப்பாய்கள் படை புறப்படட்டும். மக்கள் திலகம், மகராசி அம்மா ஆகியோரது நல்லாசி நமக்கிருக்க நாற்பதும் நமதாகும். நாளை திருநாடும் நமக்கென ஆகும் என்பதை சொல்லி, வாகை கனி கொய்திட புறப்படும் எனது அருமை அ.தி.மு.க.வின் போர்ப்படை வீரர்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *