அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார், அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் பி.எச்.அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி வாதாடுகையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினாலும் அவரது லட்சோபலட்ச ஆதரவாளர்கள் இன்னும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக உள்ளனர். எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பெயர், கொடியை பயன்படுத்தக்கூடாது என்ற இடைக்கால தடை தொண்டர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி வாதாடுகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் லட்சோபலட்சம் பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக உள்ளனர் என்று கூறுவது பொய்’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.