Tamilசெய்திகள்

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் – ஓ.பன்னீர் செல்வத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எதிரொலித்தது. இரட்டை தலைமை இருப்பதால் கட்சி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவந்தனர்.

கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால நலனுக்கும் ஒற்றை தலைமையே சரியானதாக இருக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமைக்கு முன்நிறுத்தி அவரை தேர்வு செய்யவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.

அ.தி.மு.க.வில் எழுந்து உள்ள இந்த ஒற்றை தலைமை கோஷம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிடிக்கவில்லை. தற்போது இருப்பதுபோலவே இரட்டை தலைமை தொடர்வதே கட்சிக்கு நல்லது. ஒற்றை தலைமை குறித்து தன்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் எனக்கு வருத்தம்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பாக பேட்டி அளித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றை தலைமை பற்றி ஜெயக்குமார் வெளியில் வந்து பேட்டி அளித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பொது வெளியில் பேசியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும் என்றும், அவருடன் பேசுவதற்கு தான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்கு நான்தான் காரணம் என்றும், நான் ஆதரவாளர்களுடன் கட்சியில் சேர்ந்தபோது இரட்டை தலைமை பற்றி திடீரென என்னிடம் கூறினார்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

கட்சியின் நலன் கருதி அதற்கு நான் அப்போது ஒத்துக்கொண்டேன் என்று தெரிவித்த ஓ.பன்னீர் செல்வத்திடம், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தான் நினைக்கிறாரா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் அது பற்றி அவர்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் 23-ந்தேதிக்குள் சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்துக்கள் அ.தி.மு.க. வில் சலசலப்பையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கட்சி தலைமையை கைப்பற்றுவதில் நீண்ட நாட்களாகவே ரகசிய மோதல் இருந்து வந்தது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்காமல் அமைதியாகவே உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலையும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார்? என்பது பற்றி அவர்தான் தெரிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து பலமணி நேரங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித பதிலோ, விளக்கமோ அளிக்கப்படாமலேயே உள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாளர்கள் யாரும் எந்தவித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும், போஸ்டர்களை அச்சிட்டு ஒட்ட வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி திடீர் உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

23-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று காலையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் புறப்பட்டு சென்றார். அங்கு நேற்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் சேலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஒற்றை தலைமை குறித்து கருத்து கேட்பதற்காக நிருபர்கள் முயற்சித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார்.

இந்த நிலையில் இன்று சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆரணி புறப்பட்டு சென்றார். ஒற்றை தலைமை விவகாரம், ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு இன்று பழனிசாமி பதில் அளிப்பாரா? இல்லை 23-ந்தேதி வரை அமைதி காப்பாரா? என்பதும் மிகப்பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.