அதிமுக உடனான கூட்டணியை நிராகரித்த நாம் தமிழர் கட்சி – சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும், அந்த கப்பல் பயணிக்க போவதில்லை என்று. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இலங்கை ராணுவமே தமிழக மீனவர்கள் மீது சுடுகிறது, வலைகளை அறுத்து எறிகிறது. சொல்ல முடியாத சித்ரவதைகளை செய்து வருகிறது. இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் எதுவும் கண்டுகொள்வதில்லை.

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும். அப்போது மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும், கொன்று விடுவார்கள் என பயம் ஏற்படும். கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுப்பதால் தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கூட இல்லை என்று கூறி கூட்டணியை விட்டு விலக்கி இருக்க வேண்டும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அந்த பயத்திலேயே தி.மு.க. அரசு லியோ படத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளது. மத்தியில் பா.ஜனதா கட்சி இருப்பதால் அண்ணாமலையின் பேச்சு மதிக்கப்படுகிறது. இல்லாவிடில் அவரது பேச்சு எடுபடாது. நாம் தமிழர் கட்சி மக்களுடன் தான் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை நம்பி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.

கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. அழைத்து பேசும்போது கூட, இரு கட்சிகளுக்கும் கொள்கை முடிவு வெவ்வேறாக இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட மாட்டார். அப்படி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் களம் இறங்குவேன். அவரிடம் நிறைய கேள்விகள் கேட்பேன். ஓட்டுக்காக பணம் கொடுப்பதை ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news