Tamilசெய்திகள்

அதிமுக அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், விலையுர்ந்த பொருட்கள் மாயம் – புகாரால் பரபரப்பு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே செல்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகி விட்ட நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு தனி ஆவர்த்தனம் காட்டி வருகிறார்.

அ.தி.மு.க. தலைமை பதவியை கைப்பற்றிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பெருமைபட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக ஆதரவாளர்களோடு புகுந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ரத்தக்களறியில் முடிந்தது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் புகுந்தபோது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லக்கூடிய நிலையே ஏற்பட்டிருந்தது. இது பின்னர் எல்லை மீறும் அளவுக்கு சென்றதால் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்கள் அள்ளிச்செல்லப்படும் காட்சிகளும் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை கோர்ட்டுக்கு சென்று திறப்பதற்கு அனுமதி பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அலுவலகத்தின் உள்ளே சென்று அ.தி.மு.க. தலைமை கழகத்தின் அலங்கோல காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் ராயப்பேட்டை போலீசில் அளித்த பரபரப்பு புகாரில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும், சொத்து ஆவணங்களையும், கொள்ளையடித்துச் சென்று விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன? என்னென்ன ஆவணங்கள் காணாமல் போயுள்ளன என்பது பற்றிய விவரங்களை விரிவாக பட்டியல் போட்டும் புகார் மனுவில் சி.வி.சண்முகம் குறிப்பிட்டிருந்தார். அ.தி.மு.க. தலைமை கழகத்தின் பத்திரம், அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்துக்கான அசல் பத்திரம், கோவையில் உள்ள அ.தி.மு.க. அலுவலக பத்திரம், புதுவை மாநிலத்தில் உள்ள அலுவலக இடத்துக்கான அசல் பத்திரம் என மொத்தம் 7 இடங்களுக்கான பத்திரங்களை காணவில்லை என்பதே எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தங்க கவசம் மதுரை உள்ள வங்கியில் உள்ளது. அதற்கான வங்கி புத்தகத்தை காணவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2 கம்ப்யூட்டர்களின் சி.பி.யூ.வும் மாயமாகி உள்ளது. இதுதவிர 37 வாகனங்களின் பதிவுச்சான்றிதழ்கள், வரவு-செலவு கணக்கு சம்பந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போயுள்ளதாகவும், இதனை ஓ.பன்னீர்செல்வம் ஆட்களிடம் இருந்து மீட்டு தாருங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து அபேஸ் செய்யப்பட்ட இதுபோன்ற ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் தற்போது எங்கே? உள்ளது என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றோடு 17 நாட்கள் ஆகிறது. அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்ட காட்சிகளும், அங்கிருந்து ஆவணங்கள், பொருட்கள் ஆகியவை தூக்கிச்செல்லப்பட்ட காட்சிகளும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாகவே ஒளிபரப்பானது. இந்த காட்சிகளில் யார்- யார்? என்னென்ன பொருட்களை தூக்கிச் செல்கிறார்கள்? என்பதும் தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது. ஆனால் இதுவரை ராயப்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் யாரையும் கைது செய்யவில்லை என்றும், இந்த விஷயத்தில் போலீசார் மெத்தனப்போக்குடனேயே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தற்போது ஐகோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் அளித்துள்ள புகாரில் என்னென்ன பொருட்கள்? ஆவணங்கள் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்களோ அத்தனையும் கண்டு பிடிக்க வேண்டியது போலீசாரின் கடமையாகும். கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பொருட்கள் தற்போது எங்கு உள்ளன? அவைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன? என்பது பற்றி எல்லாம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளோம். இதன் அடிப்படையில் விரைவில் அ.தி.மு.க. அலுவலக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் இருக்கும் இடத்தை நிச்சயமாக கண்டுபிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

இதன்மூலம் அ.தி.மு.க. அலுவலக ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தை போலீசார் கண்டுபிடித்து இருப்பதும், விரைவில் ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றப்போவதும் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சி.வி. சண்முகம் அளித்துள்ள புகார் மனுவுக்கு போட்டியாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. ஜே.சி.டி. பிரபாகர் அளித்திருக்கும் அந்த புகாரில் நாங்கள் யாரும் பொருட்களை கொள்ளையடிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் குண்டர்களே கலவரத்தை ஏற்படுத்தி பொருட்களை மறைத்து வைத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த புகார் மனு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி அளித்திருக்கும் புகார் மனுக்களால் அ.தி.மு.க. சொத்து ஆவணங்கள் எங்கேதான் இருக்கிறது என்கிற கேள்வியை ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு விடை அளிக்க வேண்டியது போலீசாரின் கடமையாக மாறி இருக்கிறது. இதனால் சொத்து ஆவணங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.