அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய வழக்கு – ஓ.பன்னீர் செல்வத்திடம் விரைவில் விசாரணை
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஜூலை மாதம் 11-ந்தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தினுள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 47 பேர் காயம் அடைந்தனர். பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 21-ந்தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு அ.தி.மு.க. அலுவலகத்தில் காணாமல் போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தார். இதையடுத்து சி.வி. சண்முகம் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், 2 கணினிகள், கட்சியின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், ரூ.31 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று ஆதாரங்களை வழங்கினார்.
இந்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ராயப்பேட்டை போலீசார் ஆகஸ்டு 13-ந்தேதி ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. தொடங்கி உள்ளது. விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்த குமார் ஆகியோரும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் அனைவருக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள். அதேபோல கலவரம் நடந்த நேரத்தில் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகளையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துகிறார்கள். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓரிரு நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மோதலில் ஈடுபட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ பதிவுகளை போட்டு பார்த்து போலீசார் ஆட்களை அடையாளம் கண்டு வருகிறார்கள். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கும் அ.தி.மு.க.வினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.