அதிமுகவை மிரட்டி பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது – பிரகாஷ்காரத்
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:
மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பெரிய தொழில் நிறுவனங்களிடம் தேர்தல் நிதி வசூலிக்க நிதி பத்திரத்தை வினியோகம் செய்கிறது. ரபேல் ஒப்பந்தத்திலும் இதுமாதிரி ஊழல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் மதச்சார்பின்மையை காப்பாற்ற நாம் மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். கடந்த முறை பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை அளிப்பதாக கூறியது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் 88 லட்சம் பெண்கள் வேலை இழந்துள்ளனர்.
விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பு இழப்பின் மூலம் நாட்டு மக்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர். பெண்களை பாதுகாக்க தவறிவிட்டனர். ராணுவ வீரர்களின் தியாகத்தை பா.ஜனதா அரசு அரசியலாக்குகிறது. எல்லையில் பாதுகாப்பு இல்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதா ஆட்சி தான்.
தமிழகத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. அரசை மிரட்டி பா.ஜனதா கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை காப்பாற்ற அமைக்கப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்ற நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.