அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நிறைவு செய்யாதவர்கள் வருகிற 4-ந் தேதிக்குள் அதனை முடித்து 5-ந் தேதி தலைமை கழகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் பேசியதாவது:-
எப்போதுமே கட்சிக்கு நேர்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். அதே நேரத்தில் துரோகம் செய்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களால் அ.தி.மு.க. கரை வேட்டியை கூட கட்ட முடியவில்லை. சிறுபான்மையினர் நம்மை தேடி வருவதை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் பாரதிய ஜனதா கூட்டணியில் நாம் மறைமுகமாக இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
எனவே பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்பதை மக்களிடம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். சிறுபான்மையினரை கவரும் வகையில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். கட்சியிலும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளித்து மாவட்ட செயலாளர்கள் செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அனைவரும் பணியாற்றுங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.