Tamilசெய்திகள்

அதிமுகவை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறாரா? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கோபிசெட்டி பாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டபோது தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இது பா.ஜ.க. உடனான கூட்டணிக்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூற முடியாது. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அ.தி.மு.க. கொடுக்குமா என்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்.

2024-ம் தேர்தலில் அதிக சீட் பெறுவதற்காக அ.தி.மு.க.வை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளரா என்பதற்கு அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை தெளிவாக உள்ளது. கூட்டணியை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை. அ.தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பா.ஜ.க. உடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது.

கர்நாடாகவில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்ய வேண்டும். பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இட நெருக்கடி காரணமாக அவதிப்பட்டு வருவதால் 25 ஏக்கர் நிலம் வனத்துறை சார்பில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் தருவதாக அரசு சார்பில் உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது.

அத்திகடவு-அவினாசி திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது. செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். கனிம வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். அதேபோன்று மண்பாண்டம் செய்பவர்களுக்கு குளத்தில் இருந்து இலவசமாக மண் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.