அதிமுகவின் ரகசிய கூட்டம் பற்றி கவலையில்லை – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர் காலனியில் நேற்று நடைபெற்றது. விழாவில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி கட்சிகளை எந்த நிலையிலும், எந்த இடத்திலும் தலைவர் மு.க.ஸ்டாலினை விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு பணியாற்ற கூட்டணி கட்சிகள் உறுதி அளித்து உள்ளார்கள். இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றியடையும் என முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அ.தி.மு.க. ரகசிய கூட்டம் ஈரோட்டில் நடந்து வருகிறது. ஏனென்றால் அவர்களால் வெளிப்படையாக கூட்டம் போட முடியவில்லை. இருந்தாலும் வெளியில் வந்து தானே ஆக வேண்டும். கத்தரி முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும். ரகசிய கூட்டம் போட்டுவிட்டு எங்களிடம் வரட்டுமே. நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டோம். எங்களுக்கு அதை பற்றி எதுவும் கவலையில்லை.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools