X

அதிமுகவின் ஒரு போராட்டத்திற்கே திமுக பயந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களும் மக்களுக்காக உழைத்தவர்கள். உயிரோட்டமுள்ள திட்டங்களின் மூலம் அவர்கள் மறைவிற்கு பின்னரும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் மக்கள் இயக்கமாக அ.தி.மு.க நீடிக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என கருணாநிதி நினைத்தார். ஆனால் அதை முறியடித்து 1991-ல் மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க ஆட்சியை அகற்ற மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் 4 ஆண்டுகள் சிறப்பான முறையில் நான் ஆட்சி நடத்தினேன்.

முதலமைச்சராக நான் இருந்தபோது, யார் போராட்டம் நடத்தினாலும் அனுமதி வழங்கினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. தற்போது அ.தி.மு.க. நடத்திய ஒரு போராட்டத்திற்கே தி.மு.க அரசு பயந்து விட்டது. மக்களை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலையில்லை. தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்படும் என்று கூறியது என்னாச்சு? அதை ஏன் அமல்படுத்தவில்லை?. அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஏழை, எளிய குடும்பங்களின் கனவை சிதைத்த தி.மு.க அரசை மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். தி.மு.க ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் என்று நான் சொன்னதற்கு, நிறைய முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். 4 முதலமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும். அ.தி.மு.க.பொதுக்குழு கூடி என்னை இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தார்கள். ஆனால் என்னை டெம்பரவரி தலைவர் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதி இருக்கும்போது மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக தான் இருந்தார். எங்களை பற்றி குறை சொல்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதி கிடையாது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துகிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை மிரட்ட முடியாது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வேகம் காட்டப்படுவதில்லை. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய பார்க்கிறார்கள். காவல்துறையை வைத்து வழக்குகளை வாபஸ் பெற பார்க்கிறார்கள். மக்கள் துணையோடு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? தற்போது எவ்வளவு இருக்கிறது? என்பதை கணக்கெடுத்து சோதனை நடத்தப்படும். அ.தி.மு.க.வில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கிறது. சாதாரண விவசாயி கூட அ.தி.மு.க.வில் பொறுப்பிற்கு வர முடியும். ஆனால் தி.மு.க.வில் அப்படி வர முடியாது. அ.தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.