Tamilசெய்திகள்

அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்ற போதும் ஏவுகணை பரிசோதனை நடத்திய வட கொரியா

தனது நாட்டிற்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல் என நினைக்கிறதோ, அப்போதெல்லாம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அணுஆயுத கப்பல் தென்கொரிய கடற்பகுதிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி எச்சரித்தது.

இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கடற்கரையில் ஏவுகணை செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். அவர் புதினை சந்திக்க இருக்கிறார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு, வடகொரியா ஆயுதம் வழங்கினால் அது எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றும் கதையாக அமைந்து விடும் என உலக நாடுகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ரஷியா- உக்ரைன் போர் மீது உலகத் தலைவர்கள் கவனம் திரும்பிய நிலையில், கடந்த ஆண்டில் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.