X

அதிக காற்று மாசு கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 2வது இடம் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஆற்றல் கொள்கை நிறுவனம் காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விரிவான ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்காளம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதிக மாசு கொண்ட நாடுகளில் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கோவிட் லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி முதியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் சுகாதாரக் சீர் கேட்டை ஏற்படுத்தும் என இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நிலை நீட்டித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 வயது வரை குறையும். உலக அளவில் நிலவும் காற்று மாசுவை பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும். காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகளில் தான் காணப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி இந்தியாவில் டெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்சினை உள்ளது. தற்போதை நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப் பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பீகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும் என அறிக்கை கூறியுள்ளது.