Tamilசெய்திகள்

அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! – தளர்வுகள் அறிவிக்கப்படுமா?

கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையொட்டி இந்த மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இங்கும் கொரோனா பரவுவது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு 490 என்ற அளவில் உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 131 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் நிறைய காலியாக உள்ளன.

சென்னையில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர் குணம் அடைந்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குணம் அடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

முழு ஊரடங்கு கை கொடுத்ததன் பலனாக கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 4-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சிறப்பு மருத்துவ குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்ததும் மருத்துவ குழுவினரை அழைத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர்.

முழு ஊரடங்கின் பலனாக தமிழகத்தில் தற்போது கொரோனா வேகமாக குறைந்து வருவதால் 7-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது முக கவசம் அணிவதை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் கொரோனா எந்த அளவுக்கு குறையும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து இந்த கூட்டத்தில் சில முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.