X

அதிகாரம் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கிவிட்டது – ஆசிஷ் மிஸ்ரா ஜாமீன் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

உத்தர  பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதனால் வெடித்த வன்முறையில்  விவசாயிகள் உள்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, ஆசிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிஷின் ஜாமீன் மனு லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டது.

பின்னர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது உத்தரவை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில், நீதிபதி ராஜீவ் சிங் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன் ?

ஒரு பிரதமருக்கு தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இருக்க வேண்டும். பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை. அதுதான் அனைத்து தர்மத்திற்கும் மேலானது.

தற்போது ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. உங்களை (விவசாயிகள்) வெட்டி வீழ்த்தியவன் விரைவில் வெளிப்படையாகவே சுற்றித் திரிவான். இதில் அரசு யாரை காப்பாற்றியது? விவசாயிகளையா ? விவசாயிகள் கொல்லப்பட்டபோது, காவல்துறையும், நிர்வாகமும் எங்கே இருந்தன.

அதிகார பாதுகாப்பில் அமைச்சரின் மகன் விவசாயிகளை நசுக்கினார். அதிகாரம் விவசாயிகளின் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கி உள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் வேதனையுடனும், கோபத்துடனும் இருக்கின்றனர்.

இருப்பினும், விவசாய சகோதரிகளே, நீதியின் குரலை காங்கிரஸ் என்றும் நசுக்க விடாது. நீதிக்காக உங்களுடன் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.