X

அதிகரித்து வரும் விராட் கோலியின் டக் அவுட் எண்ணிக்கை

கிரிக்கெட்டில் தற்போதைய நிலையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்றால் சற்றென்று நினைவுக்கு வருபவர்கள் விராட் கோலி , கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்தான். இதில் இந்திய அணியின் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். களம் இறங்கி 20 ரன்களை தாண்டிவிட்டால் சதம் காணாமல் திரும்பமாட்டார். பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய சாதனைகளில் பெரும்பாலான சாதனைகளை முறியடிக்கக் கூடியவர் என்று கருதப்படுபவர். குறிப்பாக சச்சின் தெண்டுல்கர் அடித்துள்ள 100 சதங்களை கடக்க விராட் கோலியால் மட்டுமே முடியும் என்ற விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

விராட் கோலி 93 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களுடன் 7547 ரன்களும், 254 ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களுடன் 12,169 ரன்களும், 90 டி20 போட்டிகளில் 3150 ரன்களும் அடித்துள்ளார்.

ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக ரன்கள் குவிக்க திணறி வருகிறார். அவர் சதம் கண்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலி டக்அவுட் ஆவது அபூர்வம். ஆனால் தற்போது டக்அவுட் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 156 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். முதல் 129 இன்னிங்ஸ்களில் 7 முறை டக்அவுட் ஆகியுள்ளார். ஆனால் அடுத்த 27 இன்னிங்ஸ்களில் 6 முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதில் இருந்தே விராட் கோலியின் சமீப பேட்டிங் திறனை அறிந்து கொள்ள முடியும்.