குஜராத்தின் அகமதாபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அதானி குழுமம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகியோர் மீது சிபிஐ குற்றவியல் சதித்திட்டம், மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒப்பந்ததாரர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடு செய்துள்ளனர். ஆந்திர பிரதேச மின் உற்பத்தி கழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெறுவதற்கு அதானி நிறுவனத்துக்கு தகுதி இல்லாத போதிலும், அந்நிறுவனத்திற்கு தேவையற்ற ஆதரவை அளித்துள்ளனர்’, என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி நிறுவனத்துடன் சேர்ந்து சதி செய்ததாகவும், கமிஷன் பெற்றதாகவும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அதிகாரிகள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதானி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘அதானி குழுமத்தின் மீதும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுவதாக ஒரு செய்தி உள்ளது. இது மிகவும் பழைய செய்தி, அதானி குழுமம் நிலக்கரி வழங்குவதற்கான செயல்முறைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. நிலக்கரி வழங்குவதில் அதானி நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை. இது ஒரு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை மட்டுமே’, என தெரிவித்துள்ளார்.