அதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு – எல்.ஐ.சி விளக்கம்

இந்தியாவின் ‘நம்பர் 1’ கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது.

அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது. அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது.

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு’ என்று தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools