X

அதானி குழுமத்திற்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, அதானி குழுமம். இதன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி (Gautam Adani).

கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து, செபி (SEBI) எஎனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்த முறைகேடுகள் குறித்த விசாரிக்க தொடங்கியது.

உச்ச நீதிமன்றத்திலும் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம், இது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இரு மாதங்கள் கழித்து “குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை” என இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற ஒரு அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இது குறித்து விசாரணை செய்வது தான் சரியானது. இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், தனியாக “சிட்” (SIT) எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசும், செபியும்தான் எடுக்க வேண்டும். தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொது வெளியில் வரும் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வதும், அவற்றின் அடிப்படையில் உத்தரவிடுவதும் நீதி பரிபாலனத்திற்கே இழுக்காக அமையும்.

இவ்வாறு அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மொத்தம் உள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து கவுதம் அதானி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை எப்பொதும் நிலைத்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியமே வெல்லும். எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களின் சிறு பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.

இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.

Tags: tamil news