அதானி, அம்பானி பற்றி பேசிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி
பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது “காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.
காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார். பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.
காங்கிரசுக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? தெலுங்கானா மண்ணில் இருந்து இதை கேட்க விரும்புகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கிண்டல் செய்யும் விதமாக “அம்பானி மற்றும் அதானி அனுப்பிய “டெம்போவில் பணம்” என்று குறிப்பிட்டபோது மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?” என கேட்டார்.
மேலும், காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராகல்காந்தி “மோடி ஜி, நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்களா?. வழக்கமாக கதவுகள் பூட்டப்பட்ட அறைக்குள்தான் நீங்கள் அதானி மற்றும் அம்பானி குறித்து பேசுவீர்கள். ஆனால், தற்போது முதல்முறையாக பொது இடத்தில் அதானி மற்றும் அம்பானி பற்றி பேசியுள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அதானி மற்றும் அம்பானி ஆகிய இரண்டு பெரும் பணக்காரர்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார் என ராகுல் காந்தி அடிக்கடி குற்றம்சாட்டுவார். காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டும். ஆனால், முதன்முறையாக அம்பானி மற்றும் அதானி குறித்து பிரதமர் மோடி விமர்சத்தியுள்ளார். குறிப்பாக அதானி குறித்து பிரதமர் மோடி பொதுவெளியில் விமர்சனம் செய்தது கிடையாது. இது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.