X

அண்ணா வேறு, கருணாநிதி வேறு அல்ல – கவிஞர் வைரமுத்து

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து நேற்று சந்தித்தார். அப்போது, அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, கவிஞர் வைரமுத்துவுக்கு கருணாநிதியின் மார்பளவு சிறிய வெண்கல சிலையை நினைவு பரிசாக வழங்கி மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:

மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் சிலையை பரிசாக தந்துள்ளார். கருணாநிதியின் தமிழுக்கும், அவரது ஆற்றலுக்கும், இனமொழி போராட்டத்துக்கும், அவரது பேரறிவுக்கும் அடையாளமாக இந்த சிலை என்னோடு இருந்து வழிகாட்டும் என்று நான் நம்புகிறேன்.

கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை செய்துவிட்டனர். இதன் மூலம், திருவள்ளுவர் தந்த இலக்கணத்துக்கு தந்தையும், மகனும் இலக்கியமாக திகழ்கிறார்கள்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழா என்பது வெறும் விழா அல்ல. அது சடங்கு அல்ல. சம்பிரதாயம் அல்ல. அந்த விழா கருணாநிதியை உயிராக கருதியவர்கள், அவரை இன்னும் நெஞ்சில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஈரம் கட்டிய நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி என்பது கருணாநிதிக்கு, மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வரலாற்று திருப்பணி என்று நான் நினைக்கிறேன்.

அதுவும், அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே மு.க.ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன். அண்ணா வேறு, கருணாநிதி வேறு அல்ல. மிக முக்கியமாக தமிழர்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. தமிழுக்காகவும், இனத்துக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்ட அந்த இருபெரும் தலைவர்களும் அருகருகே துயில் கொண்டு இருக்கிறார்கள். அருகருகே நின்று கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களும் இந்த 2 பேரையும் நெஞ்சில் அருகருகே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.