அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கூட்டம்!
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்ட கழக செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு சிறப்பாக நடத்த வேண்டும்.
தலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘15-ந் தேதி சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், விருகம்பாக்கம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.