அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதியின் சிலை திறப்பு! – சோனியா காந்தி பங்கேற்பு
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். விழாவில், 3 மாநில முதல்-மந்திரிகள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டது. இதற்காக மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதியின் சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வந்தார். 9 அடி உயரத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தயாரானதை தொடர்ந்து, அந்த சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டுள்ளது. கருணாநிதியின் சிலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட உள்ளது. கருணாநிதியின் சிலையுடன், அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையும் திறக்கப்பட உள்ளது.
சிலை திறப்பு விழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இதனால் அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் அண்ணா அறிவாலயம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக அண்ணா அறிவாலயம் போன்று அங்கு விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விழாவில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அவர்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.சோழா ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கின்றனர்.
பின்னர் மாலை 4.55 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வரும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனை தொடர்ந்து 5 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியின் சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்கிறார். இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.
சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மெரீனா கடற்கரைக்கு சென்று, கருணாநிதியின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்படும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் விழாவில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை தவிர்த்து, ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் பார்ப்பதற்கு வசதியாக, பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்படுகிறது.
சென்னை வரும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை வரவேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் நுழைவு வாசல் முதல் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரை காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி ஆர்.மனோகரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையம் தொடங்கி, ராயப்பேட்டை வரை சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
விழா முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழா நடைபெறும் சென்னை அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகிய இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த இருப்பதால் அங்கும் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது. கருணாநிதி உடலுக்கு ராகுல்காந்தி இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. ‘ஜிசட்’ பிரிவு பாதுகாப்புக்குரிய ராகுல்காந்தி மக்களோடு, மக்களாக அஞ்சலி செலுத்தினார். எனவே அதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனி கவனம் செலுத்தி உள்ளார். எனவே அவருடைய நேரடி கண்காணிப்பில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.