தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
அதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அந்த பதிவு வருமாறு:-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டம் ஆகும். இதில் ரூ.72 ஆயிரம் மத்திய அரசும், ரூ.48 ஆயிரம் தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன. மத்திய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்குகிறது. ஆக இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு 70 சதவீத தொகையை வழங்குகிறது. மத்திய அரசு 30 சதவீதம் மட்டுமே தருகிறது.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3½ லட்சம் செலவில் இந்த ஆண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும். கிராமப்பகுதிகளில் ஏழை-எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் (கலைஞர் கனவு இல்லம்) இது ஆகும். குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட இருக்கின்றன.
இந்தியாவில் 100 நகரங்களை தேர்வு செய்து தமிழ்நாட்டில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை சீர்மிகு நகரங்களாக மாற்றும் திட்டம் 2015-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டம் மத்திய, மாநில அரசின் 50:50 பங்கீட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் நகர்ப்புற உள்ளாட்சிகள் இடையே உள்ள வளர்ச்சி இடைவெளியை குறைக்க 121 நகராட்சி மற்றும் 528 நகர பேரூராட்சிகளிலும் அமலில் உள்ளது. இந்த திட்டத்துக்கான முழு நிதியையும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் இணைய முடியும். 18 வகை தொழில்களை பாரம்பரிய குடும்ப தொழிலாக செய்பவர்களுக்கு மட்டுமே பயிற்சியும், கடன் உதவியும் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டத்தில் 35 வயதுக்கு மேற்பட்ட கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து, நவீன தரத்துக்கு உயர்த்துவதே சாராம்சம் ஆகும். குடும்ப தொழிலாக இருக்க வேண்டியதில்லை. 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும். எனவே மத்திய அரசின் நலத்திட்டத்தை பெயர் மாற்றி மாநில அரசின் திட்டமாக அமலாக்கவில்லை. தகவல்களை திரித்து பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.