அண்ணாமலையில் குறுக்கீடுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் – அமைச்சர் சேகர் பாபு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள இந்து சமய அமைப்புகள் மூலம் நடத்தப்படும் கோவில்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த அடிப்படையில் பெரியசாமி, மலைச்சாமி என்னும் செல்லியம்மன் கோவிலில் 6 மாத காலமாக நடந்து வரும் பிரச்சினைகளை துறை ரீதியாக ஆய்வு செய்வதற்காக ஆணையாளர் குமரகுருபரன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட கழக செயலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்திருக்கிறேன்.

செல்லியம்மன் கோவிலில் ஏற்கனவே உடைத்து எறியப்பட்ட சிலைகள் அனைத்தையும் நிறுவும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல சாலை பணிகளை கலெக்டர் முழு வீச்சில் செய்து வருகிறார். அதே போன்று 2014-ல் பாலாலயம் செய்யப்பட்ட மதுர காளியம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்டு மாதத்துக்குள் குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கி உள்ளோம். அனைத்து பணிகளும் ஓராண்டுக்குள் முடிவடையும்.
பெரியசாமி கோவிலின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். மீண்டும் இங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையுடன கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

யூடியூபர் ஒருவர் கோவில் திருப்பணி என்ற பெயரில் பல லட்சம் பணம் வசூல் செய்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தமட்டில் அவர் முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் கருத்து பரிமாற்றம் ஏற்புடையதாக இருக்காது.

தமிழகத்தில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க 38 வருவாய் மாவட்டங்களில் வட்டாட்சியர், சர்வேயர், உதவியாளர்கள் என 114 பணியிடங்கள் ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை கல் பதித்து வேலி அமைத்து இருக்கிறோம்.

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்துள்ளதில் ஒத்துப்போகும் பட்டா, ஒத்துப்போகாத பட்டா என இருவகையாக பிரித்து பதிவேற்றம் செய்து வருகிறோம். இதில் ஒத்துப்போகாத பட்டா இருந்தால் கலெக்டர் மூலமாக மேல் முறையீடு செய்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் கணக்கெடுத்து உள்ளோம். அவை விரைவில் மீட்கப்படும். இதுவரை நிலுவையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கோவில் நிலங்கள் வாடகை, பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.

தமிழகத்தில் ஓராண்டில் எதுவும் நடக்கவில்லை, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றிய கேள்விக்கு, 5 ஆண்டுகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ஜனநாயகத்தின் மீது தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் ஆக்கப் பூர்வமான பணிகளை நோக்கி செல்கிறோம்.

மக்களின் வளர்ச்சி, மகிழ்ச்சி, நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி எங்களின் பயணம் இருக்கும். அவரின் குறுக்கீடுகளை சிறுசிறு இடையூறுகளாகத்தான் கருதுகிறோமே தவிர, அதனை பெரிய அளவில் எடுத்துக்கொள்வது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், ஊராட்சிக்குழு உறுப்பினர் சி.ராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare