நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையே வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பார் எனத் தெரிகிறது.
அதன்பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார். பொங்கலுக்குள் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். அதன்பிறகு முழுநேர அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபட இருக்கிறார்.
