Tamilவிளையாட்டு

அணி தேர்வு விஷயத்தில் நான் தலையிடுவது கிடையாது – ரவிசாஸ்திரி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்த முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி அடுத்து தலைமை பயிற்சியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கும், கேப்டன் விராட்கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்களிலேயே கும்பிளே பயிற்சியாளர் பதவியில் இருந்து ஒதுங்கினார். இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 4 ஆண்டுகளாக இந்த பதவியை வகித்த ரவிசாஸ்திரியின் பதவி காலம் முடிவுக்கு வந்ததால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.

ரவிசாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. உலக டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தது. இருப்பினும் ஐ.சி.சி. உலக கோப்பை ஒன்றை கூட வெல்லாதது ஒரு குறையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்ற 59 வயதான ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

பெரிய சர்ச்சைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை நான் தொடங்கினேன். என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் எனது நியமனம் இருந்தது. அவர்கள் தேர்வு செய்த பயிற்சியாளர் (கும்பிளே) 9 மாதத்தில் விலகியதால் வேறுவழியின்றி என்னை நியமித்தனர். பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணை கொண்டு வருவதையும் விரும்பவில்லை. நான் பொத்தாம் பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றம்சாட்டவில்லை. அதில் உள்ள குறிப்பிட்ட சிலர் நான் பயிற்சியாளர் பதவிக்கு வரக்கூடாது என்று விரும்பியதுடன், எனக்கு பதவி கிடைக்காமல் இருக்கவும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இது தான் வாழ்க்கை.

எனது பயிற்சியின் கீழ் விளையாடிய 3 ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிகளில் நாங்கள் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. குறிப்பாக முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் 60 ரன்னுக்கு விக்கெட் இழக்காமல் நல்ல தொடக்கம் கண்டு இருந்த நாங்கள், குறைந்தபட்சம் அந்த போட்டியை டிராவாவது செய்து இருக்க வேண்டும்.

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடு கடைசி நேரத்தில் ஓரங்கட்டப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அணி தேர்வு விஷயத்தில் நான் ஒருபோதும் தலையிடுவது கிடையாது. என்னிடம் கருத்து கேட்டால் மட்டுமே சொல்வேன். ஆனால் அந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் 3 விக்கெட் கீப்பர்கள் (டோனி, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட்) தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்பத்தி ராயுடு, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரில் ஒருவரை அணிக்கு கொண்டு வந்து இருக்கலாம்.

ரிஷாப் பண்ட், சுப்மான் கில், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இளம் வீரர்களாக இருந்தாலும் அவர்கள் சர்வதேச போட்டியில் அச்சமின்றி அருமையாக விளையாடுகிறார்கள். முந்தைய தலைமுறை வீரர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் குறுகிய காலத்திலேயே அனுபவம் மிகுந்தவர்களாக விளங்குகிறார்கள். இவர்கள் வரும் உலக கோப்பை போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. ஐ.பி.எல். போட்டியில் இந்த இளம் வீரர்கள் உலகின் தலைச்சிறந்த வீரர்களுக்கு எதிராகவும், அவர்களுடன் இனணந்தும் விளையாடுவதன் மூலம் அணிக்குள் நுழையும் போதே கூடுதல் அனுபவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வருகிறார்கள்.

இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரோகித் சர்மா போட்டியில் எந்தவொரு சூழ்நிலையிலும் பயமின்றி செயல்படக்கூடியவர். அணிக்கு எது நல்லதோ? அதனை எப்போதும் செய்யக்கூடியவர்.

விராட்கோலி, போட்டியின் தன்மையை அறிந்து தந்திரமாக செயல்படக்கூடிய கேப்டன். மக்கள் எப்போதும் போட்டியின் முடிவுகளை வைத்து தான் கேப்டனை மதிப்பிடுவார்கள். அந்த வகையில் விராட்கோலி சிறந்த கேப்டன் தான். இந்திய அணியின் கேப்டனாக இருப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அணிக்காக அவர் செய்த சாதனைகள், பங்களிப்பு குறித்து நிச்சயம் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.