Tamilவிளையாட்டு

அணியை தேர்வு செய்வது கடினமாக இருக்கும் – ராகுல் டிராவிட் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் வல்லுனர்களாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் சில நேரங்களில் நீங்கள் வீரர்களுடன் கடினமான உரையாடல்களை நடத்த வேண்டும்.

போட்டியில் 11 பேர் மட்டுமே விளையாட முடியும். எல்லோரும் விளையாடுவது என்பது கடினமானது. ஒரு வீரரிடம் நீங்கள் விளையாடவில்லை என்று கூறுவது கடினமாக இருக்கும்.

பெரும்பாலான மூத்த வீரர்கள் முதல் தர அணிகளுக்கு கேப்டனாக இருந்தபோதும் அல்லது தலைமைக் குழுவில் ஒரு பதவியில் இருந்தபோதும் கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் சூழ்நிலைகளை புரிந்துகொள்கிறார்கள்.

ஒரு கடினமான முடிவு எடுக்கப்பட்டால் ஒரு வீரர் அதை சரியான மனநிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த வீரரும் வெளியில் உட்கார்ந்திருக்க விரும்ப மாட்டார். ஆனால் உட்கார்ந்திருக்கும்போது அதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அதற்கு எப்படி நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்? என்பது உங்கள் அணுகுமுறையின் ஒரு சோதனையாகும்.

என்னிடம் எந்த புகாரும் வரவில்லை. அணி தேர்வு பற்றி எல்லோரும் அருமையாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். எங்கள் அணி தரம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆடும் லெவனை பற்றி நாங்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் ஏமாற்றமடைந்து முடிவுகளை எடுக்க மாட்டோம்.

சுற்றுப்பயணத்துக்கான தேர்வு குழுவுக்குள் நாங்கள் மிகவும் நல்ல உரையாடல்களை நடத்தி உள்ளோம். மேலும் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும் 11 பேர் கொண்ட அணி என்று நாங்கள் கருதுவது பற்றி சில ஆரோக்கியமான விவாதங்களை நடத்தி உள்ளோம்.

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சைவிட எங்களது பந்துவீச்சு நிச்சயம் அனுபவம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு பலகீனமானது என்று கூறுவது தவறானது. அவர்களை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

எங்கள் பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு உதவும் வகையான ஸ்கோரை நாங்கள் எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் போராட வேண்டிய காலம் இருக்கும்.

நான் தனிப்பட்ட திறமையை விரும்புகிறேன். ஆனால் கூட்டு முயற்சி மட்டுமே தொடரை வெல்ல உதவும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.