Tamilவிளையாட்டு

அணியில் இருந்து நீக்கப்படும்போது மனச்சோர்வு ஏற்படும் – அஸ்வின்

இந்திய கிரிக்கெட்டி அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. அவருக்குப்பின் ஹர்பஜன் சிங் சிறந்த ஸ்பின்னராக விளங்கினார். அவரை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

அதிவேகமாக விக்கெட்டுக்கள் வீழ்த்தி பல சாதனைகள் படைத்துள்ளார். இந்திய மண்ணில் ஜாம்பவானாக திகழும் அஸ்வின், வெளிநாட்டு மண்ணில் சற்று தடுமாகிறார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன் அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன். இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்துள்ளது என்று டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘அணியில் இருந்து நீக்கப்படும்போது மனச்சோர்வும், ஏமாற்றமும் ஏற்படும். ஆனால், விளையாட்டில் இது ஒரு அங்கம். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு தற்போது ஸ்டூவர்ட் பிராட் அணியில் இருந்து நீக்கப்பட்டது. முதல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு 2-வது போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நானும் இதேபோன்ற சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளேன். ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன், அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன். ஆனால் எதிர்மறை எண்ணம் என் மனதிற்குள் காலூன்ற நான் அனுமதிக்கவில்லை’’ என்றார்.

2019 சிட்னியில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வெளியில் இருந்தார். ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடி விசாகப்பட்டினத்தில் ஏழு விக்கெட்டுகள் அள்ளினார்.

71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 365 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *