X

அணியின் தேவைக்கு ஏற்ப தான் விளையாட வேண்டும் – ரிஷப் பண்ட்

சென்னையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் அரைசதம் அடித்த இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (71 ரன்கள்) போட்டிக்கு பிறகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்ளூர் போட்டிகளை போல் சர்வதேச போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை சில சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவத்தின் மூலம் உணர்ந்து இருக்கிறேன். சர்வதேச போட்டியை பொறுத்தமட்டில் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரியும், அணியின் தேவை என்ன? என்பதற்கு தகுந்த மாதிரியும் தான் விளையாட வேண்டும். இது நான் கற்றுக்கொள்ளும் காலமாகும். எனது ஆட்டம் அணிக்கு உதவும் வகையிலும், நல்ல ரன்கள் குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

இந்த போட்டியில் ஓரளவு ரன் எடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தவே விரும்புகிறேன். என்னை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் உள்ளது. நான் ரன் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்து இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுகையில் எல்லா இன்னிங்சும் எனக்கு முக்கியமானதாகும். இளம் வீரரான நான் ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

சில சமயங்களில் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு முக்கியமானதாகும். நானும், ஸ்ரேயாஸ் அய்யரும் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு தான் செயல்பட்டோம். அது நமது அணியின் ரன்னை உயர்த்த உதவியது. பும்ரா சிறந்த பவுலர் என்பது எல்லோருக்கும் தெரியும். காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. மற்ற பவுலர்களும் மோசமாக செயல்படவில்லை. இளம் பவுலர்கள் பாடம் கற்று வருகிறார்கள். நான் பயிற்சியில் ஈடுபடும்போது தான் கிரிக்கெட் குறித்து சிந்திப்பேன். மற்ற நேரங்களில் கிரிக்கெட் குறித்து அதிகம் சிந்திக்க மாட்டேன். அமைதியாக செயல்படுவதுடன், ஆட்ட திறனையும், உடல் தகுதியையும் மேம்படுத்தும் படி அணி நிர்வாகம் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி நான் செயல்பட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஹெட்மயர் அளித்த பேட்டியில், ‘சர்வதேச போட்டியில் எனது அதிகபட்ச ரன் (139) இதுவாகும். எனது இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பானதாகும். இலக்கை நிர்ணயிப்பதை விட இலக்கை விரட்டி பிடிப்பது எப்பொழுதும் சிறப்பானதாகும். சேசிங்கில் அணியை வெற்றி பெற வைப்பது அதிக சுகமானதாகும். கடைசி வரை நின்று ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது வருத்தம் தான். அதனை செய்ய நான் முயற்சித்து வருகிறேன். ஷாய் ஹோப்புக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. எனவே அவருடன் இணைந்து பேட்டிங் செய்தது நான் ஆக்ரோஷமாக செயல்பட உதவிகரமாக இருந்தது.

எனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடி வருகிறேன். சில சமயங்களில் ரன்கள் குவிக்க முடியும். சில நேரங்களில் ரன் வராது. கடந்த சீசனில் நான் ஐ.பி.எல். போட்டியில் சரியாக ரன் எடுக்கவில்லை. அதேநேரத்தில் அந்த அனுபவம் வலுவான நிலைக்கு திரும்ப வழிவகுப்பதாக இருந்தது. கரீபியன் லீக் போட்டியில் சீனியர் வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவம் சிறப்பாக விளையாட தூண்டுதலாக இருந்தது. பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.

Tags: sports news