அட்சய திருதியை தினத்தன்று வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்கள் மற்றும் தங்கம் வாங்கும் பழக்கம் சமீப ஆண்டுகளாக அதிகரித்தப்படி உள்ளது. இந்த ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கமும், பொருட்களும் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் பொருட்கள் வாங்கினால் மட்டுமே அது அட்சயமாக பெருகும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். எனவே இதற்காகவே அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில்தான் தங்களுக்கு புதிய பொருட்கள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்று பலரும் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று சூரியனும், சந்திரனும் உச்ச ராசியில் இருப்பார்கள். சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் இருப்பார்கள். இந்த அமைப்பு புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஆசீர்வதிப்பதாக இருக்கும்.
சூரியன் தந்தை வழியை குறிப்பார். சந்திரன் தாய் வழியை குறிப்பார். அவர்கள் உச்சம் பெற்றிருப்பதால், இன்று புதிய பொருட்கள் வாங்கும்போது நம் முன்னோர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை பொன்னும், பொருளும் வந்தால் அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். எனவே இன்று அட்சய திருதியை தினத்தை மக்கள் அதிர்ஷ்டகரமான நாளாக கருதுகிறார்கள்.
என்றாலும் புதிய பொருட்கள் வாங்கும் போது, ‘சுக்கிரை ஹோரை’ நேரத்தில் வாங்க வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரையும் பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும் சுக்கிரன் காலமாகும்.
ஆனால் இன்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம். இந்த நேரத்தில் தங்கம் மற்றும் புதிய பொருட்கள் வாங்க பலரும் தயங்குவார்கள். அத்தகையவர்கள் இன்று குரு ஹோரை நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். இன்று குரு ஹோரையானது மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உள்ளது. கவுரி பஞ்சாங்கக் குறிப்புப்படி இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை அமிர்த யோகம் உள்ளது. எனவே இந்த நேரத்தில் புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரமாக உள்ளது.
ஆனால் சிலர் இன்று மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை குளிகை உள்ளதே என்று யோசிக்கக் கூடும். அதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இன்னொரு மாற்று வழி உள்ளது.
அட்சயத் திரிதியை தினத்தன்று ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அதை மிக, மிக சிறப்பான நாளாக நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். அதாவது பொதுவாக அட்சய திருதியை நாளில் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பார்கள். அதே சமயம் ரோகிணி நட்சத்திர நாளில் அட்சய திருதியை தினம் வந்தால், அது நமக்கு பல மடங்கு பலன்களை தருமாம்.
இன்று அட்சய திருதியை தினம் அந்த சிறப்பான தினமாக வருகிறது. இன்று அதிகாலை 12.24 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அதன் பிறகு ரோகிணி நட்சத்திரம் வந்து விடுகிறது.
எனவே இன்று மதியம் 3 மணிக்கு மேல் புதிய பொருட்கள் வாங்கலாம். 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம் என்பதால் 4.30 மணிக்கு பிறகு பொருட்கள் வாங்கலாம்.
இன்று பஞ்சாங்கப்படி அமிர்தயோகம் உள்ளது. எனவே ரோகிணி நட்சத்திரத்தில் அமிர்தயோகத்தில் இன்று 4.30 மணி முதல் 6 மணி வரை புதிய பொருட்கள் வாங்குவது மிக, மிக உகந்தது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
காலையில் 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம். அதை தவிர்த்து விட்டு 10.30 மணி முதல் 12 மணி வரையிலான நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம். கவுரி பஞ்சாங்கத்தில் இந்த 1 மணி நேரத்தை லாபம் தரும் நேரமாக குறித்துள்ளனர்.
ஆகையால் இன்று புதிய பொருட்கள் வாங்க காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான 1 மணி நேரமும், மாலை ரோகிணி நட்சத்திர அம்சத்துடன் வரும் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான 1 மணி நேரமும் உகந்த நேரங்களாகும்.
இந்த இரு நேரக்குறிப்புகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் மிக, மிக உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொருட்கள் வாங்கினால் நிச்சயம் அவை அட்சயமாக பெருகும்.