Tamilசெய்திகள்

அட்சய திரிதியை – தமிழகத்தில் 18 டன் தங்கம் விற்பனை

‘அட்சயா’ என்றால் எப்போதும் குறையாதது என்று பொருள். அட்சய திருதியை நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துகளான தங்கம், வெள்ளி நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப்பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நகைகடைகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை வாங்க காலையில் இருந்தே பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னையிலும் நேற்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் விற்பனை நடைபெற தொடங்கியது. போத்தீஸ் ஸ்வர்ண மஹால், ஜோயாலுக்காஸ், ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், லலிதா ஜூவல்லரி, ஜெயச்சந்திரன் கோல்டு ஹவுஸ், பிரின்ஸ் ஜூவல்லரி, மலபார் கோல்டு அண்ட் டைமன்ட்ஸ், பீமா ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

அட்சய திருதியை விற்பனை குறித்து நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஜிலானி கூறியதாவது:-

அட்சய திருதியை முன்னிட்டு வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் நகைகளை வாங்கி சென்றனர். அதுவும் கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இருந்ததை விட தற்போது ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 424-ம், கிராமுக்கு ரூ.303-ம் விலை அதிகரித்து உள்ளது. இன்று (நேற்று) நகை கடைகள் காலை 5 மணிக்கு திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் காலையிலேயே கடைகளுக்கு ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர்.

காலையில் ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 528-ம், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 816-ம், மாலையில் ஒரு பவுன் 38 ஆயிரத்து 368-ம், கிராம் ரூ.4 ஆயிரத்து 796-க்கும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களின் ஆதரவை பொறுத்து நள்ளிரவு வரை கடைகள் திறந்து வியாபாரம் செய்யப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு விற்பனையை விட நடப்பாண்டு 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்து உள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து முன்கூட்டியே நகைகளை தேர்வு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு சென்றவர்கள், அட்சய திருதியை நாளில் வந்து மீதம் உள்ள தொகையை செலுத்தி மனதிருப்தியுடன் நகைகளை வாங்கி சென்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்ததை விட நடப்பாண்டு வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் வந்து நகைகளை வாங்கி சென்றனர்.

அட்சய திருதியை நாளில் நகை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதால் அவர்கள் தகுதிக்கு தகுந்தார் போன்று 2 கிராம் முதல் 10 பவுன் வரை நகைகளை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரிகள் எதிர்பார்த்தது போன்று வியாபாரம் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் கூறும் போது, தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு இன்று (நேற்று) ஒரு நாளில் சுமார் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பொதுமக்களின் ஆதரவுடன், ஒரேநாளில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

தங்க நகைக்கடைகள் நேற்று நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்தன. நகைக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் நிறைந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்களும் ஆர்வமுடன் நகைகள் வாங்கி சென்றனர்.