Tamilசெய்திகள்

அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது – 75 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. ஒரே திசையில் இரு வழிப் பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் 640 மீட்டர் நீளம் கொண்டது. எல் வடிவத்தில் பாலம் அமைகிறது.

இந்த பாலம் அமைக்கப்பட்டால் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம். ஐ.ஐ.டி.யில் உள்ள மேம்பாலத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இந்த மேம்பாலம் அமைகிறது. இந்த மேம்பாலம் கட்டுவதற்காக ரூ.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் மட்டும் 60 சதவீத அளவுக்கு இந்த சாலையில் பயணிக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த மேம்பாலம் கட்டும் பணிக்காக சர்தார் படேல் சாலையில் இருந்து 75 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் மாற்றி நடப்பட்டன.

ஒரு மீட்டருக்கும் குறைவான சுற்றளவு கொண்ட மரங்கள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிபுணர் உதவியுடன் அகற்றப்பட்டன. பிடுங்கி நடப்பட்ட மரங்கள் தற்போது நன்றாக உள்ளன. அந்த மரங்கள் குறைந்தபட்சம் 1 வருடம் பராமரிக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் பிடுங்கி நட முடியாத 1,500 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ரூ.30 லட்சம் செலவில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.