X

அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, முடிச்சூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

அத்துடன் ஆரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் இருந்தும் உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து அதிக மழை பெய்து கொண்டிருப்பதால் முடிச்சூர், வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர் கவுல் பஜார் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

முடிச்சூர் அமுதம் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் தண்ணீர் செல்லும் வேகம் தடைபட்டது. இதையடுத்து ஊராட்சி செயலர் வாசுதேவன் தலைமையில் உள்ளாட்சி அமைப்பினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அடையாறு ஆற்றில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினர்.

செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருவதால் ஓரிரு நாளில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பழைய ஏரிகள் நிரம்பி உபரிநீர் அதிக அளவு வந்து கொண்டிருப்பதால் கரையைத் தாண்டி பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.

கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ? என மக்கள் பீதியில் உள்ளனர்.