தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாவும், பின்னர் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
அதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது’ எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.