இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. கேரளாவில் கூட குறைந்து விட்டது. ஆனால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால், கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும்போது உஷாராக இருக்க வேண்டும். இதுவரை கிடைத்த பலனை வீணாக்கி விடக்கூடாது.
மக்கள் நெரிசலான இடங்கள்தான், கொரோனா பரவுவதற்கு எளிதான இடங்களாகும். ஆகவே, பண்டிகைகளை பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பயணங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். இதுதான் இப்போதைய தேவை.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதம்பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர். 62 சதவீதம்பேர் ஒரு டோஸ் மட்டுமாவது போட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.