ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் கேப்டன் வில்லியம்சன் அடித்த அரைசதத்தின் (70 ரன்) உதவியுடன் ஐதராபாத் அணி நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ரன்னுக்குள் பார்த்தீவ் பட்டேல் (0), கேப்டன் விராட் கோலி (16 ரன்), டிவில்லியர்ஸ் (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதன் பிறகு ஹெட்மயரும் (75 ரன், 4 பவுண்டரி, 6 சிக்சர்) குர்கீரத்சிங் மானும் (65 ரன்) இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்தனர். ஐ.பி.எல்.-ல் 4-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்சமாக இது அமைந்தது. அவர்களின் அபார ஆட்டத்தால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது.
தனது முதல் 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை (0, 5, 9, 1 ரன்) தாண்டாத ஹெட்மயர் அதன் பிறகு கழற்றி விடப்பட்டார். இதன் பின்னர் கடைசி லீக்கில் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரைசதம் அடித்து ஜொலித்து இருக்கிறார். பெங்களூரு அணிக்காக ரூ.4.2 கோடிக்கு வாங்கப்பட்ட அவரே ஆட்டநாயகன் விருதை பெற்றார். பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஆறுதல் வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இந்த தொடரின் பிற்பகுதியில் நாங்கள் விளையாடிய விதத்தை கவனித்தால், அது போன்ற ஆட்டத்தை தான் ஆரம்ப கட்டத்தில் எதிர்பார்த்தோம். முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று விட்டு அதன் பிறகு ஐ.பி.எல். போன்ற தொடரில் மீண்டு வருவது மிகவும் கடினம். இந்த தொடரில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறோம். புள்ளி பட்டியலில் நாங்கள் விரும்பிய நிலை கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த தொடரில் பிற்பகுதியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். அதனால் இதை மோசமான சீசன் என்று நினைக்கவில்லை. கடைசி 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. கடைசி சில ஆட்டங்களில் எங்களது வீரர்கள் விளையாடிய விதம், வெளிப்படுத்திய தீவிர முயற்சியை நினைத்து பெருமைப்பட்டு கொள்ளலாம்.
ரசிகர்களின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களை (ரசிகர்கள்) போன்றே நானும் இந்த அணியுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன். ஐ.பி.எல்.-ல் நீங்கள் தான் (பெங்களூரு) சிறந்த ரசிகர்கள். ஸ்டேடியத்திற்கு அதிக அளவில் வந்து ஊக்கப்படுத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அடுத்த ஆண்டில் நிச்சயம் ஆட்டத்தில் முன்னேற்றம் காண்போம். வலுவான அணியாக மீண்டெழுவோம்.
இவ்வாறு கோலி கூறினார்.