X

அடுத்த ஆண்டு நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா முதலில் சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நிலவில் உள்ள மற்ற வளங்கள் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். குறிப்பாக நிலவில் உள்ள ஹீலியம் பற்றி ஆய்வு செய்து புதிய தகவல்களை பெற தீர்மானித்தனர்.

இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர். இந்த விண்கலம் சந்திரயான், லேண்டர், ரோவர் ஆகிய 3 பிரிவுகளை கொண்டதாகும். கடந்த ஆண்டு அந்த விண்கலம் நிலாவை நோக்கி செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாக பயணம் செய்த சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவியை நிலவின் தென்பகுதியில் தரை இறக்கும் முயற்சிகள் கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. உலகின் முதல் முயற்சியான அந்த முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வியில் முடிந்தது.

நிலவின் தென் பகுதியில் லேண்டர் தரை இறக்கப்பட்ட போது திடீரென ஏற்பட்ட அதிக வேகம் காரணமாக அது சற்று திசை மாறியதால் தோல்வி ஏற்பட்டது. நிலவின் தென் பகுதியில் 15 நாட்கள் பகலும், 15 நாட்கள் கடும் குளிருடன் இரவும் இருக்கும் என்பதால் லேண்டரை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து நிலவின் தென்பகுதியை ஆராய சந்திரயான்-3 என்ற விண்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கும் பணிகளை விஞ்ஞானிகளின் தனி குழு மேற்கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதத்துக்குள் சந்திரயான்-3 விண்கலம் மூலம் செல்லும் லேண்டரை நிலவின் தென் பகுதியில் தரை இறக்க உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் லேண்டர் தரை இறங்கியபோது எத்தகைய குறைகள் பிரச்சினைகள் ஏற்பட்டன என்பதை ஆய்வு செய்து புதிய லேண்டர் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கடந்த மாதம் முதல் இதுவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 தடவை கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக லேண்டர், ரோவர் ஆகிய 2 கருவிகளை மட்டும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

நிலவில் தரை இறங்கும் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் தங்களது ஆய்வு பணிகளை நிலவை சுற்றி வரும் சந்திரயான் மூலம்தான் தரைக்கு அனுப்ப முடியும். இந்த ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தற்போது நல்ல நிலையில் நிலவை சுற்றி வந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது.

இன்னும் சில ஆண்டுகளுக்கு சந்திரயான்-2 விண்கலம் நிலவை சுற்றி வந்து தொடர்ந்து ஆய்வு செய்யும். எனவே இந்த சந்திரயான்-2 விண்கலம் மூலம் தகவல்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தற்போது லேண்டர், ரோவர் ஆகிய 2 கருவிகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற சாதகமான நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டர், ரோவர் கருவிகளை அதிநவீன வசதிகளுடன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளின் 3 துணை குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 3 துணை குழுக்கள் லேண்டரில் உள்ள சென்சார் மற்றும் வழிகாட்டு அமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும்.

கடந்த செப்டம்பர் மாதம் லேண்டர் தரை இறக்கப்பட்டபோது நிலவின் மேற்பரப்பில் விழுந்தபோது சரிந்து விழுந்து விட்டது தெரிய வந்தது. அத்தகைய நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக தற்போது லேண்டரின் கால்களை மிகவும் வலு உள்ளதாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

நிலவின் மேற்பரப்பு எத்தகைய தன்மையில் இருந்தாலும் லேண்டரின் வலுவான கால்கள் மூலம் அதை சரியானபடி தரை இறக்க முடியும் என்ற நம்பிக்கை இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை லேண்டரில் ரோவர் உள்பட சில அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

தற்போது உருவாக்கப்படும் லேண்டரில் எத்தனை கருவிகள் வைப்பது என்பது பற்றி இன்னும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்யவில்லை. இன்னும் சில மாதங்களில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிந்து விடும்.

நிலவின் தென் பகுதியில் விண்கல ஆய்வு கருவியை தரை இறக்க அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் முயற்சி செய்யவில்லை. இந்தியா தனது முயற்சியை கைவிடாமல் 2-வது முறையும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப இருப்பது குறிப்பிடத்தக்கது.