Tamilசெய்திகள்

அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி தான் – சசிகலா பேட்டி

சிவகங்கையில் வேலு நாச்சியார், குயிலி ஆகியோரது நினைவிடத்தில் சசிகலா மாலை அனிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இணைவது நிச்சயம். அடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான். அதுவும் மக்கள் ஆட்சிதான். தி.மு.க.வினர் ஓராண்டு சாதனை என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் மக்கள் அதுபோல் நினைக்கவில்லை. அவர்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். அதுவே என்னுடைய பார்வையும் ஆகும்.

500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் ஒன்று கூட செய்யவில்லை. சொல்வதெல்லாம் நன்றாக சொல்கிறார்கள். ஆனால் செய்கை சரியாக இல்லை. எதுவும் செய்யவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தி.மு.க.வினர் தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அதை கண்டும் காணாததுபோல் இருப்பது எப்படி?

ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடைபெறுவது குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை.

மாநில அரசை மத்திய அரசு நசுக்குவதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள்.

ஜெயலலிதா இருக்கும்போதும் வேறு அரசுதான் மத்தியில் இருந்தது. ஆனால் அவர் இதுபோல் குறை கூறியது இல்லை. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை தீவிரமாக கேட்டு பெற்றுக்கொடுத்தார்.

அதுபோல் தி.மு.க.வினர் செய்ய வேண்டும். மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை. ஓர் ஆண்டு கடந்துவிட்டது. மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள். அதை விடுத்து மத்திய அரசை குறைகூறிக்கொண்டே எத்தனை ஆண்டுகள் கடத்துவார்கள்?

தி.மு.க.வினர் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். வெறுமனே பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து குறைகூறி பேசலாம். ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் என்கிற முறையில் மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். ஆட்சி முடியும் வரை மத்திய அரசை குறைகூறிக்கொண்டே இருப்பார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.