இந்திய டெஸ்ட் அணியில் தற்போது அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இருவரும் பந்தை விரல்களால் சுழற்றக் கூடியவர்கள். இருவருக்கும் அடுத்து குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை தயார் செய்தனர். ஆனால் இருவராலும் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.
அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை என்றால் விரல்களால் பந்தை சுழற்றக்கூடிய திறமையான அடுத்த கட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை.
இதனால் இரண்டாம் கட்ட சுழற்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என எல். சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எல். சிவராமகிருஷ்ணன் கூறுகையில் ”அஷ்வின் கடின உழைப்பாளி. அணியில் அவருக்கான இடம் சும்மா கிடைக்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று சிறப்பான வருடங்கள் அவருக்கு உள்ளது. தற்போது நாம் அடுத்த நிலைக்கான இளம் சுழற்பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் வெளியேறும் போது, அவர்கள் தயாரான நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.