X

அடுக்குமாடி குடியிருப்பின் சொத்து வரி 3 மடங்காக உயர்வு – அதிர்ச்சியில் சென்னைவாசிகள்

சென்னையில் சொத்து வரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு உயர்த்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு 2 மற்றும் 3 மடங்கு வரை சொத்துவரி அதிகரிக்கப்பட்டது. அதைவிட வணிக பயன்பாட்டிற்கான சொத்துக்களுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது சொத்து வரியாகும். கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில் ரூ.607.38 கோடி சொத்துவரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது. தொழில் வரியாக ரூ.201.59 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு அதிகம் ஆகும். கடந்த வருடம் இதே காலத்தில் சொத்து வரியாக ரூ.320.21 கோடியும், தொழில் வரியாக ரூ.171.4 கோடியும் வசூலிக்கப்பட்டன.

இந்த வருடம் சொத்துவரி பல்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரோடு புதிதாக இணைந்த பகுதிகளுக்கு குறைவாகவும், சென்னை நகர் பகுதிகளுக்கு அதிகமாகவும் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு தெருவின் சொத்து மதிப்பை கணக்கிட்டு வரியை உயர்த்தினார்கள். ஒரு சிலருக்கு மிக அதிகமாக சொத்துவரி உயர்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டின் மொத்த இடம், கார் பார்க்கிங் பகுதி, லிப்ட் மற்றும் பொதுவான இடம் ஆகியவற்றை கணக்கிட்டு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் 1200 சதுர அடி பகுதியில் 920 சதுர அடியில் வசித்து வருகிறார். மீதமுள்ள 280 சதுர அடியில் கார் பார்க்கிங், லிப்ட், படிக்கட்டு ஆகியவை அமைந்துள்ளன.

இது வணிக ரீதியான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடாகும். இதனால் 300 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டுக்கு ரூ.1368-ல் இருந்து ரூ.5,335 ஆக அரையாண்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவான இடத்திற்கும் சேர்த்து ஒருவரிடம் வரி விதிப்பது முறையல்ல என்று குறிப்பிட்ட குடியிருப்பு வாசி இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு இருப்பதாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகவும் அதிகாரி தெரிவித்ததாக அவர் கூறினார்.

சொத்துவரி உயர்வுக்கு பிறகு ஏராளமான புகார்கள் வருகின்றன. அதனை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஒருசில பகுதிகளுக்கு சொத்துவரி கணக்கீடு அதிகமாக உள்ளது. இதுவரையில் மிக குறைந்த அளவில் அவர்கள் கட்டிவந்து இருக்கிறார்கள்.

அதனை முறையாக ஆய்வுசெய்து கணக்கிட்டு வரி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை சரிசெய்து தருகிறோம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: south news