X

அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் – இந்திய அணியால் பாதித்த டிக்கெட் விற்பனை

டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்கள் ஆதரவு பெரிய அளவில் குறைந்தது. ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்பதால் டெஸ்ட் போட்டியை மைதானத்திற்கு வந்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் பெரிய அளவில் குறைந்ததால், ஆட்டத்தை நான்கு நாட்களாக குறைக்கலாமா? என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் பகல்-இரவு டெஸ்டாக மாற்றினால் வேலை முடிந்து ரசிகர்கள் மைதானத்திற்கு பெரிய அளவில் திரண்டு வரலாம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எண்ணியது. இதனால் ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. இந்த டெஸ்டை அடிலெய்டில் நடத்தியது. இதற்கு மைதானம் அமைந்துள்ள மாநிலத்தில் உள்ள ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டு அணிகளிடம் அடிலெய்டில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட கோரிக்கை வைத்தது. நியூசிலாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியாவில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாடியது. தற்போது இந்தியா ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

ஆனால், இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் அடிலெய்டில் முதல் டெஸ்ட் நாளைமறுநாள் ‘டே’ போட்டியாக நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ‘டே-நைட்’ போட்டிக்கு கிடைத்த வரவேற்பு போன்றது இல்லை. உள்மாநிலத்தில் டிக்கெட் விற்பனை பாதித்துள்ளது என்று தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அசோசியேசன் கவலை தெரிவித்துள்ளது.